Friday 24 April 2015

கார்பரேட் போதை!


மின்னல் வேகத்தில் வருவதாக நினைத்துக் கொண்டு மிக வேகம் என்று கூட சொல்ல முடியாத ஒரு வேகத்தில் வந்து கொண்டிருந்தான். தனது புது பைக் ஹெட் லைட்டை ஹைபீமில் வைத்துக்கொண்டு லாய்ட்ஸ் காலனியிலிருந்து புறப்பட்ட அவன் அஜந்தா வந்தவுடன் ஏனோ அந்த ப்ளாட்ஃபாரம் பழக்கடையின் முன் வண்டியை நிறுத்தினான். அதன் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் ஆள் இல்லாமல் இருப்பதை கவனித்தான்; அதில் என்னமோ ஒரு அற்ப சந்தோஷம் அவனுக்கு. 

அதுவரை பழம் வாங்குவதைப்பற்றி துளியும் சிந்திக்காத அவன், பழக்கடையில் இருந்த அக்காவிடம் ஆரஞ்சு பழத்தின் விலையைக் கேட்டான். "கிலோ நூர் ருவா" என்று அவள் சொன்ன பதில் அவன் புத்தியை எட்டவிடாமல் "எம்பது ருவாய்க்கு தரேன்" என்றாள் மீண்டும். அவளது வியாபார யுக்தி அவனுக்கு புரிந்தது; பிடித்தது. 


கடந்த மாதம் நடந்த அப்ரெய்ஸல் மீட்டிங்கில் தனது பாஸ் முதலில் 6% சம்பள உயர்வு தருவதாகச் சொல்ல, அதனால் அதிருப்தி அடைந்த அவன் தனது வீர தீர ப்ரதாபங்களையெல்லாம் எடுத்துரைத்து, தனது பேக்கேஜை உயரத்தக் கோரியதும், அதன் பின் அவர் அதை 8% ஆக உயர்த்த இணங்கியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அதில் உள்ள சூட்சமத்தை இப்போது உணர்ந்தான். அதனால் வந்த எரிச்சலில் முதலாளித்துவத்தை பற்றி மூன்று வநாடிகள் சிந்தித்தான். அடுத்த நாள் காலை ஆஃபீஸில் "What's happening?" என்று தனது பாஸ் கேட்பதையும், அதற்கு 'ஈ' என்று பல்லிளித்து தினமும் தான் கூறும் பதிலையும் நான்காவது விநாடி அவன் மனக்கண்ணில் பார்த்தவுடன் எரிச்சலை விட்டுவிட்டான். 


எண்பது ரூபாயை கொடுத்து விட்டு, எடை சரியாக உள்ளதா என்று கூட பார்க்காமல், ஆரஞ்சு பழம் போடப்பட்ட பையை வாங்கிக்கொண்டு பைக்கை கிக் செய்யும் போது, "பூ வாங்கிக்க தம்பி" என்று பக்கத்து கடை அக்காள் கேட்க, சற்றே புன்னகைத்து, "சீக்கிரமே உங்களாண்ட பூ வாங்க்கிறேன் கா" என்றான்.